" தமிழ்நாட்டில் எந்த வைரசும் பரவவில்லை " - மா.சுப்பிரமணியன்.

" தமிழ்நாட்டில் எந்த வைரசும் பரவவில்லை " - மா.சுப்பிரமணியன்.
Published on
Updated on
1 min read

புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை, டூமிங் குப்பத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, தலைமை செயலாளர் இறையன்பு,மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி  ஆகியோர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,... 

" கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமுன் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவாதாகவும், தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்கள் ஆண்டுக்கு 1250 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது",  எனத் தெரிவித்தார். 

மேலும், இரத்த அழுத்தம்; சிறுநீரக பிரச்சினைகள்; தொழு நோய்க் கண்டறிதல்; காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படுகிறது எனவும், பல்வேறு வகையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், மக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். 

மேலும், இந்தியாவிலேயே  தமிழ்நாட்டில் தான் 811 அரசு மருத்துவமனைகளில் 968 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், 1 கோடியே 40 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இதயம்,கணையம்,கல்லீரல், தோல், கண் உள்ளிட்ட பலவகை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக காப்பீடு திட்டத்தில் இணையும் வகையிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் இந்த முகாம்களில் நேரடியாக சென்று காப்பீடு அட்டை பெறாதவர்கள் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை புதிதாக முகாம்களில் காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது", என்றும் தெரிவித்தார்.

அதோடு, சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகை XBB தமிழ்நாட்டில் பரவவில்லை என்றும், எந்த வைரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது என கூறினார்.தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழல் தான் உள்ளது அவர்களிடன் சிகிச்சை பெறுவர்களும் பாதுகாப்பாக தான் உள்ளார்கள் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டில் தனி பாதுகாப்பு சட்டம் தேவையில்லை என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com