விதிகளை மீறி பால் விற்பனை செய்த 2000 சங்கங்களுக்கு நோட்டீஸ்...விளக்கம் அளிக்காவிட்டால்...அமைச்சர் எச்சரிக்கை!

விதிகளை மீறி பால் விற்பனை செய்த 2000 சங்கங்களுக்கு நோட்டீஸ்...விளக்கம் அளிக்காவிட்டால்...அமைச்சர் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி, வெளிமாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த அமைச்சர் நாசர், கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சங்கங்கள் கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டதாகவும், அண்டை மாநிலத்தினர் தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

எனவே, பால் தட்டுப்பாட்டை போக்க நாளை பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால், கடந்த சில நாட்களுக்கு முன்  பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்த அவர், தற்போது நிலை சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், சீரான பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com