“திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்” - கட்சி மாறியதும் சொன்ன “அந்த” ஒரு வார்த்தை!
தமிழக அரசியல் காலம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு குறித்த விவாதங்கள் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளன. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வமும் அதிமுகவில் இணைவாரா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் பல கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் .
அப்போது “கடந்த தேர்தலில் தனியாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டது எங்கள் பக்கம் எவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டத்தான் அதற்கும் கூட எதிரிகள் எவ்வளவு சதி செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எதிரும் புதிருமாக இருந்த அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் தம்பி டிடிவியும் ஒன்றிணைத்துள்ளனர். நான் அதிமுக கூட்டணியில் இணைய தாரக உள்ளேன் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரா?” என அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “ஓபிஎஸ் அவர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் இது ஒரு தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல என்றும், 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி எடுத்த ஒருமனதான முடிவு” என்றும் அவர் விளக்கமளித்தார். எனவே மீண்டும் பன்னீர்செல்வம் கூட்டணி குறித்த நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என கூறி வந்தார். கடந்த (பிப் 20) ஆம் தேதி காலை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ .பன்னீர் செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து பேசினார்.
இது குறித்து சட்டசபையில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அவர் “ திமுக அரசு நிச்சயம் மீண்டும் ஆட்சிக்கு வரும் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது மீண்டும் அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள்” என தெரிவித்தார். இதற்கு முன்னரே அன்று காலை சட்ட சபையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் “ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆசியுடன் மீண்டும் திமுக ஆட்சி அமையும் அவர்கள் செய்த காலை உணவு திட்டம் மகத்தானது” என பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஐயப்பன் பேசிய கருத்து குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் “மக்கள் மனதில் இருக்கும் கருத்துக்களை தான் அவர் தெரிவித்திருக்கிறார் இது தான் உண்மை” என திமுகவிற்கு ஆதரவாக பதிலளித்திருந்தார். எனவே அரசியல் வட்டாரங்களில் பன்னீர்செல்வம் திமுகவில் இணைய போகிறார் என பேசப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தனது ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலருடன் சென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “அம்மா இறந்த பிறகு பல அதிமுக தொண்டர்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டனர். இங்கு சிலர் அரசியல் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் தளபதி நல்ல வழிநடத்தலின் மூலம் நல்லாட்சியை நடத்தி வருகிறார். எனவே நான் முழு மகிழ்ச்சியுடன் தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்து கொண்டேன்... இனி அரசியல் சர்வாதிகாரி எடப்பாடி வெற்றி பெற முடியாது” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)