இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனைக் காரணமாக வைத்து ஆம்னி பேருந்துகள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி, வசூல் வேட்டையில் ஈடுபட்டன.
அவ்வாறு அதிக கட்டணம் வசூலித்த காரணத்தினால், 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில், மக்கள் அனைவரும் சென்னை திரும்ப தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்காத பேருந்துகளையும் தவறு செய்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விடுவிக்க ஆம்னி சங்க உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தவறு செய்த பேருந்துகள் மீதான நடவடிக்கை தொடரும் என்று ஆம்னி சங்க உரிமையாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இன்று மாலை அறிவித்திருக்கக்கூடிய போராட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்று அமைச்சர் ஆமணி சங்க உரிமையாளர்களிடம் கேட்டிருக்கிறார்.
போக்குவரத்து துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அவர்களின் முடிவை தெரிவிக்க இருப்பதாக ஆம்னி சங்க உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தரப்பினர் தெரிவித்துள்ளார்.