பள்ளி, கல்லூரிகளில் ஓணம் ஸ்பெஷல்...மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 29-ஆம் தேதி கொண்டாப்பட உள்ளது. சாதி - மத வேறுபாடுகளின்றி கொண்டாடப்படும் இந்த பண்டிகையை கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இசை வாத்தியங்கள் முழங்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடனம் ஆடியபடி வந்தனர். தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் வகையில் இசைக்கு ஏற்றபடி மாணவிகள் ஒய்யாரமாக நடனமாடினர்.
மாணவர்களின் உற்சாக ஊர்வலம் கல்லூரியில் நிறைவடைந்ததை அடுத்து, அங்கு பிரம்மாண்ட அளவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அத்தப்பூ கோலம் முன்பு மாணவிகள் ஒன்று கூடினர். அப்போது, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கதகளி மற்றும் பாரம்பரிய உடை அணிந்த மாணவிகளின் கண்கவர் நடனம் ஓணம் பண்டிகையை மேலும் அழகுரச்செய்தது.
இதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வரும் 29-ஆம் தேதி ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பல வண்ண மலர்களை கொண்டு மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர். பின்னர், கேரள செண்டை மேளம், கதகளி மற்றும் பாரம்பரிய உடை அணிந்து மாணவிகள் உற்சாக நடனமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இடையே காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'என்னவளே, அடி என்னவளே' என்ற பாடலை கல்லூரி பேராசிரியை பாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோல், கோவை மாவட்டம் அரசூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் நடனம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. வண்ண மலர்களை கொண்டு பிரம்மாண்ட அளவில் அமைக்கப்பட்ட அத்தப்பூ கோலத்தின் அருகே பாரம்பரிய உடை அணிந்து, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மாணவிகள் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.