பரமக்குடி கோட்டையில் மகுடம் சூடப்போவது யார்? அதிமுக - திமுக இடையே கடும் மோதல்!? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பலதரப்பட்ட சமூகங்கள் மற்றும் வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு பின்தங்கிய பகுதியாகவும் பார்க்கப்படுகிறது...
paramakudi
paramakudi
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்"இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பரமக்குடி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த ஊராகவும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள பெருமைக்குரிய இடமாகவும் பரமக்குடி விளங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான தனித் தொகுதியான பரமக்குடியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்து விரிவான கள ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரமக்குடி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், இங்கு இளைஞர்களின் பங்கு முதன்மையாக உள்ளது. 18 முதல் 25 வயதுடையவர்கள் 13 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30.4 சதவீதமும், 41 முதல் 60 வயதுடையவர்கள் 37.6 சதவீதமும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 சதவீதமும் உள்ளனர். சமுதாய ரீதியாகப் பார்த்தால், தேவேந்திர குல வேளாளர்கள் 25 சதவீதம், முக்குலத்தோர் 15 சதவீதம், யாதவர்கள் 15 சதவீதம், சௌராஷ்டிரா சமுதாயத்தினர் 13 சதவீதம் மற்றும் செட்டியார் சமுதாயத்தினர் 8 சதவீதம் என்ற அளவில் பரவி உள்ளனர். இந்தத் தொகுதியானது பலதரப்பட்ட சமூகங்கள் மற்றும் வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு பின்தங்கிய பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பார்க்கையில், அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதது மற்றும் தரமான சிகிச்சை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மிகப்பெரிய குறையாக உள்ளது. உட்புறச் சாலைகள் மோசமாக இருப்பதோடு, தெருவிளக்கு வசதிகள் முறையாக இல்லை என்பதும் மக்களின் வேதனையாக இருக்கிறது. சிப்காட் போன்ற பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால், இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி அதிக அளவில் வெளிநாடுகளுக்கும், சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் கூலித் தொழிலாளிகளாகச் செல்லும் நிலை நீடிக்கிறது. மேலும், ஆற்றில் கொட்டப்படும் கழிவுநீரால் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் புறவழிச்சாலை மேம்பாலப் பணிகளில் நிலவும் தாமதம் போன்றவை மக்களின் முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தரவுகளைப் பார்த்தால், திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் 46.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் 39.6 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 9 சதவீத வாக்குகளையும் பெற்றன. உலக நாயகன் கமல்ஹாசனின் சொந்த ஊராக இருந்தாலும், மக்கள் நீதி மய்யம் இங்கு வெறும் 1.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலில் திமுக 135 பூத்களில் வலுவாகவும், 167 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதேசமயம் அதிமுக 128 பூத்களில் வலுவாகவும், 180 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. சுமார் 61 பூத்கள் எந்தப் பக்கமும் சாயாத 'ஸ்விங்' நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி 41 சதவீத வாக்குகளையும், ஓபிஎஸ் 33.2 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இதில் திமுக கூட்டணி 95 பூத்களில் முன்னிலை பெற்றிருந்தது.

பரமக்குடி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பு விவரத்தை தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, பரமக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி பெரும் எழுச்சியைக் காண வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 18 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 162 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 138 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 55 பூத்கள் இன்னும் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானிக்க முடியாத 'ஸ்விங்' நிலையில் உள்ளன.

இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, அமமுக மற்றும் ஜான் பாண்டியன் போன்றவர்களின் கூட்டணிச் சமன்பாடுகள் இந்தத் தொகுதியில் அதிமுகவிற்குப் பெரும் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜான் பாண்டியன் மற்றும் அமமுகவின் வாக்கு வங்கிகள் இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com