"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் தனித் தொகுதியான செய்யூர், கடற்கரை கிராமங்களையும் விவசாயப் பகுதிகளையும் உள்ளடக்கியது. கடந்த 2021 தேர்தலில் வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்த இந்தத் தொகுதியில், தற்போது நிலவும் சூழல் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. 82 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
செய்யூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.3 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 32.3 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 16.3 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 41 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் 28 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 4 சதவீதமும், முதலியார்கள் 5 சதவீதமும் உள்ளனர். கடற்கரை ஓரம் வசிக்கும் மீனவர்களின் வாக்குகள் இந்தத் தொகுதியில் மிக முக்கியமானவை.
செய்யூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறுவது பெரும் குறையாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை தேடிப் புலம் பெயரும் அவலம் தொடர்கிறது. கடலோரச் சாலைகள் மோசமாக இருப்பதும், அவசர சிகிச்சைக்குப் போதுமான அரசு மருத்துவமனை வசதி இல்லாமையும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்து சேவைகள் மிகவும் குறைவாக இருப்பதும் செய்யூர் மக்களின் நீண்ட காலப் புகாராகும்.
தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி (விசிக) இங்கு 46.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 46 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 44.2 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 45.1 சதவீதமாகச் சற்றே அதிகரித்துள்ளது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 140 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 120 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 98 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 72 பூத்களாகச் சரிந்துள்ளது. சுமார் 29 பூத்கள் ஊசலாடும் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, செய்யூரில் அதிமுக 135 வாக்குச்சாவடிகளில் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. திமுக 106 வாக்குச்சாவடிகளில் மட்டுமே வலுவாக உள்ளது. சுமார் 40 வாக்குச்சாவடிகள் ஸ்விங் நிலையில் உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 24 சதவீத வாக்குகளைப் பெறும். சுமார் 3 சதவீத வெற்றி வித்தியாசத்தில் தற்போது அதிமுகவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.