காஞ்சிபுரத்தில் அண்ணாவின் கோட்டையைத் தக்கவைக்குமா திமுக? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

தற்போதைய எம்எல்ஏ எழிலரசன் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும்...
kanchipuram
kanchipuram
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம், திமுகவின் ஆன்மாவாகப் பார்க்கப்படுகிறது. பட்டுத் தொழில் மற்றும் ஆன்மீகச் சுற்றுலா நிறைந்த இந்தத் தொகுதியில், நெசவாளர்களின் பிரச்சினைகளே தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. தற்போதைய எம்எல்ஏ எழிலரசன் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், நெசவாளர் அதிருப்தி அவருக்குச் சவாலாக மாறலாம்.

காஞ்சிபுரம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 40.4 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக வன்னியர்கள் 26 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். முதலியார்கள் 20 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 15 சதவீதமும், யாதவர்கள் 8 சதவீதமும், பிராமணர்கள் 6 சதவீதமும் உள்ளனர். 65 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், நெசவாளர் குடும்பங்களின் வாக்குகள் மிக முக்கியமானவை.

காஞ்சிபுரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக நூல் விலை உயர்வால் பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. கோயில் நகரமான இங்கு நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகளால் சிதைந்த சாலைகள் மக்களின் பெரும் அதிருப்திக்குக் காரணமாக உள்ளன. ஆற்றில் கழிவுநீர் கலப்பது மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படாதது போன்ற சுகாதாரச் சீர்கேடுகள் நீண்ட காலப் பிரச்சினைகளாக நீடிக்கின்றன.

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 44.6 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 45 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 43.8 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 45 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 120 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 127 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 116 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 101 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 41 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, காஞ்சிபுரத்தில் திமுக 140 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 90 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 90 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 31 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com