

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசு, அச்சுத் தொழில் மற்றும் தீப்பட்டித் தொழிலுக்கு உலகப் புகழ்பெற்றது. சுமார் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் தொழில்துறை மையத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவும் அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிவகாசி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.4 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30.6 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.4 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16.3 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகப் பார்க்கும் போது, நகர்ப்புறங்களில் நாடார் சமுதாயத்தினர் 25 சதவீதம் பேர் அதிக அளவில் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் முக்குலத்தோர் 20 சதவீதம் பேர் பலமாக உள்ளனர். இவர்களுடன் தேவேந்திர குல வேளாளர், நாயுடு, முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் எனப் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் தொகுதியாக இது விளங்குகிறது.
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தீப்பட்டித் தொழிலுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் சில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் பெரும் குறையாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் வரி உயர்த்தப்பட்டுள்ள அளவுக்குக் குடிநீர் வசதி மேம்படுத்தப்படவில்லை என்பது மக்களின் வேதனையாக இருக்கிறது. பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு மிகவும் குறைவாகவும், தாமதமாகவும் வழங்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் வெளிவட்டச் சாலைப் பணிகள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை போன்றவை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே உள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 43.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் லட்சுமி கணேசன் 33.6 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 11.4 சதவீத வாக்குகளையும் பெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 82 பூத்களில் வலுவாகவும், 55 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதிமுக 78 பூத்களில் வலுவாகவும், 60 பூத்களில் பலவீனமாகவும் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டியே நிலவியது. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வாக்குகள் ஒருங்கிணைந்த போது, இப்பகுதியில் அதிமுக 188 பூத்களில் முன்னிலை பெற்றுத் தனது பலத்தை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, சிவகாசி தொகுதியில் அதிமுக கூட்டணி பெரும் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி (காங்கிரஸ் உட்பட) 32 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து கணிசமான வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, அதிமுக 95 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 85 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 35 சதவீத பூத்கள் இன்னும் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானிக்க முடியாத ஸ்விங் நிலையில் உள்ளன.
சிவகாசி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பு விவரத்தை தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிவகாசிக்குத் திரும்பி நீண்ட நாட்களாகத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது அதிமுகவிற்குப் பெரும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கட்சித் ரீதியாகப் பலவீனங்கள் இருந்தாலும், வேட்பாளர் தனிப்பட்ட ரீதியில் வலுவாக இருப்பது அதிமுகவிற்கு எட்ஜ் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.