மதுராந்தகத்தில் அதிமுகவின் வியூகம் மீண்டும் எடுபடுமா? வெற்றி யாருக்கு?

உள்ளூர் பிரச்சினைகளாக மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படாததால் அதன் கொள்ளளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது...
maduranthakam
maduranthakam
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் தொகுதி, கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரு சில தொகுதிகளில் ஒன்றாகும். தற்போதைய எம்எல்ஏ மரகதம் குமாரவேல் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் அவருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

மதுராந்தகம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.1 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.9 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 38 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் 30 சதவீதமும், முதலியார்கள் 12 சதவீதமும், நாயுடுக்கள் 5 சதவீதமும் உள்ளனர். முழுக்க முழுக்க கிராமப்புறத்தைச் சார்ந்த இந்தத் தொகுதியில், ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் முடிவே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கிறது.

மதுராந்தகம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படாததால் அதன் கொள்ளளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. பாலாற்றுப் படுகையில் நிலவும் மணல் கொள்ளையினால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பேருந்து வசதிகள் சீராக இல்லாதது மற்றும் ஏரிப் பாசனக் கால்வாய்கள் சிதலமடைந்துள்ளதும் விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 45 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-லும் 44 சதவீதத்திலேயே நீடிக்கிறது. அதிமுக 2021-ல் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-லும் அதே 47 சதவீதத்தைத் தக்கவைத்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 101 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 125 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 125 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 73 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 33 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, மதுராந்தகத்தில் திமுகவும் அதிமுகவும் சமபலத்தில் மோதிக்கொள்கின்றன. இரண்டு கட்சிகளுமே தலா 95 முதல் 100 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளன. சுமார் 110 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுகவும் அதே 35 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் பூஜ்யமாக இருப்பதால், தேர்தல் நேரத்தில் மக்கள் எடுக்கும் முடிவே வெற்றியைத் தீர்மானிக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com