சாத்தூர் கோட்டையில் மகுடம் சூடப்போவது யார்? திமுகவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா அதிமுக? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பட்டாசு மற்றும் தீப்பட்டி ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடிவிபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன...
satur
satur
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு குறித்து இங்கே பார்க்கலாம். விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொகுதியான சாத்தூரில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலவப்போகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்களின் மனநிலை குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சாத்தூர் காராசேவ் மற்றும் தீப்பட்டித் தொழிலுக்குப் புகழ்பெற்ற இந்தத் தொகுதியில், தற்போதைய கள நிலவரப்படி எந்தக் கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பது குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சாத்தூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.8 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30.4 சதவீதமும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 39 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக முக்குலத்தோர் 27 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நாயுடு சமுதாயத்தினர் 24 சதவீதம், ரெட்டியார் சமுதாயம் 21 சதவீதம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் 20 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த ஒரு தொகுதியாகும்.

சாத்தூர் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பு விவரங்களை தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பட்டாசு மற்றும் தீப்பட்டி ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடிவிபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வாகத் தொழிலாளர்களுக்கு நவீன பாதுகாப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், விபத்தில் காயமடைவோருக்குச் சிகிச்சை அளிக்கத் தாலுகா அளவில் சிறப்புத் தீக்காய சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மேலும், சீரற்ற குடிநீர் விநியோகம், முறையற்ற குப்பை மேலாண்மை மற்றும் பட்டாசுத் தொழிலைத் தவிர மற்ற வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாகக் களையப்படாமல் உள்ளன. வெங்காய விவசாயிகளுக்கான குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுக கூட்டணி (மதிமுக) சார்பில் போட்டியிட்ட ரகுராமன் 38.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ரவிச்சந்திரன் 33.1 சதவீத வாக்குகளையும், அமமுகவின் ராஜவர்மன் 17.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 6.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் திமுக 122 பூத்களில் வலுவாகவும், 95 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதிமுக 115 பூத்களில் வலுவாகவும், 105 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. சுமார் 65 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் மற்றும் பாஜகவின் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து சுமார் 50 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக கூட்டணியை விடப் பலமாக இருந்தனர்.

தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, சாத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 21 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும் (தவெக 12%, நாம் தமிழர் 9%). பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 140 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 125 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 47 பூத்கள் இன்னும் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானிக்க முடியாத ஸ்விங் நிலையில் உள்ளன. இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com