ஆத்தூரில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? திமுக கோட்டையில் ஓட்டை போடுமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் அதிரடி கணிப்புகள்!

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அவர்கள் 72.62% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றி பெற்றார்...
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ஆத்தூர், பல ஆண்டுகளாகத் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சொந்தத் தொகுதி என்பதால், மாநிலம் முழுவதும் இந்தத் தொகுதியின் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முக்கிய வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

ஆத்தூர் தொகுதியின் வாக்காளர் அமைப்பைப் பார்க்கும்போது, இங்கு இளைஞர்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. 18 முதல் 25 வயதுடைய வாக்காளர்கள் 13.11% ஆக உள்ளனர். இது மற்ற தொகுதிகளை விடச் சற்று அதிகம். சமூக ரீதியாகப் பார்த்தால், இங்கு வேளாள கவுண்டர்கள் 21%, தேவேந்திர குல வேளாளர்கள் 20%, முக்குலத்தோர் 16%, செட்டியார்கள் 10%, மற்றும் கிறிஸ்தவர்கள் 6% எனப் பரவலாக உள்ளனர். பிற சமூகத்தினர் 27% அளவில் உள்ளனர். இது ஒரு பகுதி நகர்ப்புறம் மற்றும் பெரும்பகுதி கிராமப்புறம் சார்ந்த தொகுதியாகும்.

முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:

இங்குள்ள மக்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கை என்பது கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலைச் சார்ந்ததாகும். குறிப்பாக நூல் விலை உயர்வு நெசவாளர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. புகழ்பெற்ற ஆத்தூர் சுங்கிடி சேலை உற்பத்திக்குத் தேவையான போதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் இல்லை என்பது நீண்ட காலப் புகாராக உள்ளது. மேலும், கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் ஏற்படும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு விவசாயிகளையும் பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது.

ஆத்தூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அவர்கள் 72.62% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றி பெற்றார். இது தமிழகத்திலேயே அதிகபட்ச வெற்றிகளில் ஒன்றாகும். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வாக்கு சதவீதம் 66.28% ஆகச் சற்று சரிந்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை 2021-ல் வெறும் 13.23% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், 2024-ல் அது 22% ஆக உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தனது பலத்தை 7.5%-லிருந்து 9% ஆக அதிகரித்துள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில், மைக்ரோ மேனேஜ்மென்ட் அடிப்படையில் பார்த்தால், 2021-ல் திமுக 145 பூத்களில் வலுவாக இருந்தது. தற்போது அது 132 ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம் அதிமுக தனது பலத்தை 90 பூத்களிலிருந்து 102 ஆக உயர்த்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி 23 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. வரும் தேர்தலில் சுமார் 80 பூத்கள் 'ஸ்விங்' (Swing) பூத்களாக, அதாவது வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 தேர்தலுக்கான முன்கூட்டிய கணிப்பின்படி, திமுக 38% வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. அதிமுக 34% வாக்குகளைப் பெற்றுத் திமுகவிற்கு மிக நெருக்கமான போட்டியை வழங்கும். நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து சுமார் 24% வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி வித்தியாசம் என்பது வெறும் 4 முதல் 5% மட்டுமே இருக்கும். கடந்த முறை போல ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பது இந்த முறை சாத்தியமில்லை என்றும், அதிமுக மிகக் கடுமையான போட்டியைத் தரும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com