பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம்... தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்...

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.
பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம்... தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்...
Published on
Updated on
1 min read

கடந்த மாதம் 20-ந்தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய பா.ஜ.க.-அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும், தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  ஒரு சில தலைவர்கள் கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com