புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தி பயன்படுத்தப்படாத நிலத்தை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை அமைக்க:
புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழி சாலை அமைப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்ட்டது. ஆல்பர்ட் இம்மானுவேல் என்பவர் உள்ளிட்டோரின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டன. சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய பின்னர் தங்களது நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரி ஆல்பர்ட் இம்மானுவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திரும்ப ஒப்படைக்க..:
அதில், நான்கு வழி சாலை அமைப்பதற்காக நிலத்தை அளித்த நிலையில் அந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஏற்கனவே நான்கு வழி சாலை அமைந்துள்ளதால் புதிதாக நான்கு வழி அமைக்க தங்களது நிலம் தேவைப்படாது என கூறியிருந்தார். அதனால் தங்களது நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனவும், இழப்பீடாக வழங்கப்பட்ட பணத்தை திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
உத்தரவு:
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, சாலை அமைக்கும் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட மனுதாரர் உள்ளிட்டோரின் நிலங்களை திரும்ப அளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஒன்பது சதவீத வட்டியுடன்:
அதே சமயம் சாலை அமைப்பதற்காக நிலம் தேவைப்படும் பட்சத்தில் சட்டப்படி கையகப்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன் எட்டு வாரத்திற்குள் திரும்ப அளிக்க நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஆகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஐபோனை தொலைத்த நடிகை ஷாலு ஷம்மு... காவல்நிலையத்தில் புகார்!!