உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், இறக்கும்முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.