மாலைமுரசு அதிபர் பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலைமுரசு அதிபர் பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சர்வதேச டென்னிஸ் போட்டி, சென்னையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் ஹிட்டைன் ஜோஷி இந்த தகவலை தெரிவித்தார்.
சென்னை அடையாறில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவுக் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் இப்போட்டிகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப் 9- ம் தேதி வரை நடைபெறுவதாகவும் அதில், உலக அளவில் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்கள் 56 பேர் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.டி.எஃப் ஆண்கள் ஃபியூச்சர்ஸ் சர்க்யூட் 2023-ன் 4-வது போட்டியாக இந்த போட்டி நடைபெறுவதாக தெரிவித்த ஹிட்டைன் ஜோஷி, இதில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கூறினார். மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சர்வதே அரங்கில் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் செயலாளர் பிரேம்குமார் கர்ரா, இணைச் செயலாளர் வெங்கடேஷ், காந்திநகர் கிளப் பிரசிடெண்ட் சுனில் ரெட்டி, செயலாளர் மகேஷ் ஷன்பாக், துணை தலைவர் மோகன் சதாசிவம், உறுப்பினர்கள் நாராயணன் மற்றும் சுதர்ஷன் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: இன்று முதல் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில்...!!!