“சொன்னதை செய்து காட்டிவிட்டார் முதல்வர்” - பரந்தூர் விமான நிலையம் ரத்து.. நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!

விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்...
Parandur Protest Committee
Parandur Protest Committee
Published on
Updated on
2 min read

சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க முந்தைய அரசு திட்டமிட்டது. சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில், ரூ.27,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இந்த விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாகவும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை கையாளும் வகையிலும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, கிராம மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற நிலையில், திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவராக இருந்த விஜயும் ஆதரவு தெரிவித்திருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் பகுதிக்கு நேரில் சென்ற விஜய், விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்களை சந்தித்தார். அப்போது, “விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை; பரந்தூரில் வேண்டாம்” என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், போராடும் விவசாயிகளுடன் தொடர்ந்து நிற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழக அரசு அமைந்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அறிவித்தார். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போராட்டக்குழுவினர், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த போராட்டத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் ஜி. சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.டி. கதிரேசன் மற்றும் குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு அவர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பரந்தூர் போராட்ட குழுவினர் நீண்டகாலமாக தங்களது நிலம், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வந்த நிலையில், தங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிடும் முடிவை எடுத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினர். மேலும் “சொன்னதை செய்து காட்டிவிட்டார் முதல்வர்” என நெகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந. ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com