இந்தியா - இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் தொடர்பான 21 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். ஆறு வழி சாலைகள், அதிவேக விரைவு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மேம்பாட்டுப் பணிகள், சாலைப் பள்ளங்களை சரிசெய்திட கைபேசி செயலி உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைத்துறை திட்டப் பணிகள் கணினி மயமாக்கப்பட்டு எளிதில் கண்டறியப்படும் என குறிப்பிட்ட அவர், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, நெடுஞ்சாலையோரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிக்க : மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?
தொடர்ந்து, 9 மாவட்டங்களில் 215 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படுவதோடு, துறையூர், திருப்பத்தூர், நாமக்கலில் 286 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், 6 மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள், மதுரை அலங்காநல்லூர் சாலை அகலப்படுத்துதல், 273 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக்குதல், 8 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். ராமேஸ்வரம் - இலங்கையின் காங்கே சந்துறை வழித்தடத்தில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.