ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...ஆடி, பாடி மகிழ்ந்த பொதுமக்கள்!

ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...ஆடி, பாடி மகிழ்ந்த பொதுமக்கள்!
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணாசாலையில் 3வது வாரமாக நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனர்.

சென்னையில் முக்கிய பகுதிகளான தி நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பரபரப்பான சூழலில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே இவற்றையெல்லாம் மறக்க ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய "போக்குவரத்து இல்லா சாலை" எனும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அதன்படி பரபரப்பாக இயங்கும் சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் முதல் ஜிபி சாலையில் இன்று புத்துணர்ச்சியோடு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கள் உற்சாகமாக  கலந்து கொண்டனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே, கோலப்போட்டி, பாட்டுப் போட்டி, நடனம், யோகா போன்ற பல்வேறு போட்டிகள் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

மேலும் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். ஊரகப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் போல சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது.

பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இசை, நடனம் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றிருந்தது. பல்வேறு திரைப்பட பாடல்களுக்கு சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உற்சாகமாக நடனமாடி குதுகலித்தனர்.

சென்னையில் வேலைப்பளுவிற்கு இடையே வார இறுதி நாளில் நடத்தப்படும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியும் தருவதோடு மகிழ்ச்சியையும் தருவதாக இதில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com