
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் தான் தனுஷ்கோடி. ஆயிரத்து 960-ம் ஆண்டு காலகட்டத்தில் தனுஷ்கோடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு இருவின், கோஷன், என இரண்டு கப்பல் போக்குவரத்து இருந்தது. அங்கே ரயில் நிலையம் தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட ஒரு துறைமுக நகரமாக தனுஷ்கோடி இருந்தது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இயங்கிய போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வந்த பின்பு தனுஷ்கோடி சென்றடையும். சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்பிடிக்கும் மீனவர்கள் கூட்டம் இங்கு காணப்படும்.
ஆயிரத்து 964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இரவு ஏற்பட்ட ஆழிப் பேரலை மற்றும் கோரப்புயல் தாண்டவத்தின் காரணமாக தனுஷ்கோடி நகரமே கடலுக்குள் மறைந்தது.
குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர், சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சுமார் 800-க்கும் மேற்பட்டோர் என அனைவரும் உயிரிழந்தனர். பலத்த சூறைக்காற்றால் வழிபாட்டுதலங்கள் தபால் மற்றும் நூல் நிலையமும் தரைமட்டமானது.
அங்கிருந்த மக்கள் அனைவரும் கடல் அலைக்கு இறையாகினர். மக்கள் வாழ தகுதியில்லாத இடம் தனுஷ்கோடி என ஐநா சபையால் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் இந்திய வரைபடத்தில் இருந்து தனுஷ்கோடி என்ற மிகப்பெரிய துறைமுக நகரம் மாயமானது.
இதுவெல்லாம் நடந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், கடற்கோளாலும், புயலாலும் சிதைந்து சின்னா பின்னமான வழிபாட்டுத்தளங்களும், இடிந்துபோன கட்டிடங்களும் இன்றளவும் நினைவு சின்னங்களாக நிற்கின்றன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு, தனுஷ்கோடியை மாற்ற அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.