

கோவை பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் புத்தகங்கள் போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் முன்னணி எழுத்தாளர் பெருமாள் முருகன்.
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்து வருகிறார் பெருமாள் முருகன். தனது கட்டுரையில், தவறான வரலாற்றுத் தகவல்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்பட்ட நூல்கள் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், இது திமுகவின் ஊழல் எனத் தவெக ஐடி விங் கடுமையாகச் சாடியுள்ளது.
அவர்களது பதிவில், "கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?.
இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான் எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா?
ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
ஸ்டாலின் படிக்கச் சொன்னார். விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?.
யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?.
ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?.
அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது." என விமர்சித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்