இ.பி.எஸ் பற்றி பேச தனபாலுக்கு நிரந்தர தடை!

Published on
Updated on
1 min read

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள  நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆவணங்களை  மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நிரந்தர தடையாக மாற்றியமைத்து உத்தரவிட்டார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com