

நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கிற்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே. பெனிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக ஒன்பது காவலர்களுக்கு மதுரை நீதிமன்றம் திங்களன்று மரண தண்டனை விதித்தது. தீர்ப்புக்கு எதிர்வினையாக, நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், குற்றத்தின் கொடூரத்தைக் கண்டித்தும், பொறுப்பினை வலியுறுத்தியும் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கில் நேற்று (7ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், கமல் ஹாசன் தனது X தளத்தில், சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்? போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும்? எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும், என்று தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கமல் ஹாசனை தொடர்ந்து, அதிமுக தனது X தளத்தில், சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்றும், காவல் மரணங்களை அஇஅதிமுக ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்பதற்கு, பாரபட்சமற்ற விசாரணைக்கு இந்த வழக்கை CBI-க்கு மாற்றியதே சாட்சி. மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், சட்டத்தின் முறையில் தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறது அஇஅதிமுக அரசு. திமுக-வைப் போல் CBI விசாரணைக்கு பயந்து நீதிமன்றம் சென்ற வாதாடும் அரசு அல்ல அஇஅதிமுக அரசு என்று பதிவிட்டிருந்தார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.