தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைக்கும் அரசாக திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் தன்னுடைய நலத்திற்காக கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து வரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கள்ளச்சாராய கலாச்சாரத்தையும், விஷச்சாராயத்தையும் விற்பனை செய்ய அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருக்க கூடிய நிலையில், அரசே சயனைடு கலந்த மதுவை விற்பனை செய்வது என்பது மக்களை அழித்தொழிக்கும் செயலாகும். இதன்மூலம் டாஸ்மாக்கில் மிகப் பெரிய குளறுபடி, ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தொடர்ந்து, தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்து, கள்ளச் சாராய கலாச்சாரத்தை திமுக அரசு உருவாக்குவதாகவும், தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைக்கும் அரசாக திமுக அரசு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபரீத ஆட்சி வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும், இனியாவது மக்களை சுரண்டாமல், மடைமாற்றி விடும் பணியை செய்யாமல், மக்கள் பணியாற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.