
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், அரசு முத்திரையுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டத்தை, தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவு செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது .
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தன்னார்வலர்கள் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினாலும்,, திமுகவினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்தல் பரப்புரை நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதனால், உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தையும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன் மற்றும் பி.வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக கூறினர்.
இதனையடுத்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பத்து லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.