
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது. முன்னதாக 20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 28 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் 47 அடி முழு கொள்ளளவு கொண்ட மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக உள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நான்கு நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.