நெல்லை தாழையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற்சாலைகள் பல இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் மிகக் குறைந்த அளவே வைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பலரை குறைந்த நாள் பணிக்கு வருமாறும் ஆலை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமை சில மர்ம நபர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டுகளை வைத்து விட்டு சென்றதாக தொலைபேசியில் தொிவித்தனர். மேலும் தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தரவேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் அளித்தது.
அதன்படி தாழையூத்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுத்தனர். சுமாா் 6 நபர்களை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிகுண்டு தடுப்பு பிாிவு போலீசாா் பரிசோதனை செய்து வருகின்றனர். சோதனைக்கு பின்பு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு எந்த ரகத்தை சேர்ந்தது என்று தெரியவரும் எனவும் குற்றவாளிகள் தொடர் சங்கிலி போல் நீண்டு வருவதால் விசாரணையின் முடிவில் உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.