அன்புமணியின் ‘தலைவர்’ பதவி நீட்டிப்பு! “பாமக -வில் நீண்டகால சட்ட போராட்டம் நடக்கும்!!” - அடித்து சொல்லும் தராசு ஷியாம்!!

இந்த பொதுக்குழுவால் பாமக -விற்குள் நீண்டகால சட்ட போராட்டம் தொடர வாய்ப்புண்டு.கட்சியின் சட்ட விதிகளின்படி ..
pmk general body meeting
pmk general body meeting
Published on
Updated on
3 min read

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தற்போது தனது கட்சி அதிகாரத்தையே இழந்துவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான் என்பதை நாடறிந்த உண்மை. தனது அரசியல் வாரிசாக அன்புமணியை உருவாக்கிய ராமதாஸ், மகன் ஒருகட்டத்தில் தன்னை தாண்டி சென்று விடுவார் என்பதை உணராமல் இருந்தது தான் இதற்கு காரணம்.

அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட  மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 

புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது,  என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி கட்சியின் நலன்  கருதி இரு தரப்பையும் நேரில் சந்தித்து நேற்று பேச அழைப்பு விடுத்திருந்தார், ராமதாஸ் காணொளி வாயிலாகவும் அன்புமணி நேரிலும் வந்து நீதிபதியிடம் பேசினர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்னர், அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடை இல்லை என தீர்ப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று அன்புமணி தலைமையில் பாமக -வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டுகாலம் நீட்டித்து பொதுக்குழுவில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு திருக்கச்சூர் ஆறுமுகம் ஜிகே மணி ஏ கே மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் ராமதாசும் கலந்துகொள்ளவில்லை. பாமக நிறுவனர் இல்லாமல் நடக்கும் இந்த முதல் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2026 வரை தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவியில் நீடிப்பார்கள் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தொடர்ந்து பேசிய அன்புமணி "தமிழ்நாடு மற்றும் புதுவையில் சமூகநீதிக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் உன்னத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். அரசியல் கட்சி தொடங்கியதன் நோக்கம் பதவிகளை அனுபவிப்பதுதான் என்ற இலக்கணத்திற்கு மாறாக, பொதுமக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் இதை அறிவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பொதுச் செயலாளராக ச. வடிவேல் ராவணன் அவர்களும், பொருளாளராக ம.திலகபாமா அவர்களும் பொதுக் குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023 -                                                                                               ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன் பின் 941 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசிடம் தாக்கல் செய்யவில்லை. இதற்காக கூறப்படும் நியாயமற்ற காரணங்களை ஏற்க முடியாது.

வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான தரவுகள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளன. அவற்றை குறித்த காலத்தில் பெற்று ஆய்வு செய்து, வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அதிகபட்சமாக 3 மாதங்கள் போதும். ஆனால், 30 மாதங்களாகியும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலினத்தோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதியரசர் நாகமோகன் தாஸ் ஆணையம் 165 நாள்களில் கர்நாடகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 101 சமூகங்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் அவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் சொல்லி வைத்துக் கொண்டு தாமதம் செய்கின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்”

இந்நிலையில் இது குறித்து  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் கருத்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், “இந்த பொதுக்குழுவால் பாமக -விற்குள் நீண்டகால சட்ட போராட்டம் தொடர வாய்ப்புண்டு.கட்சியின் சட்ட விதிகளின்படி இவ்வாறெல்லாம் பதவியை நீட்டித்து கொள்ளமுடியுமா என்றும் சரியாக தெரியவில்லை. ஆக இந்த பொதுக்குழு  ராமதாஸ் தரப்போடு  சுமூகமான உறவை ஏற்படுத்தாது. இது மேலும் கட்சிக்குள்  பிளவைதான் ஏற்படுத்தும். ஒருவேளை ராமதாஸ் வழக்கு தொடர்ந்தால் இந்த பொதுக்குழு செல்லாமல் போக கூட வாய்ப்புண்டு” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com