பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை, அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். இதனால் கொந்தளித்துள்ள பாமகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதேபோல், கள்ளக்குறிச்சியில் முதலமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்த பாமகவினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் 50க்கும் மேற்பட்ட பாமக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மற்றும் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீசார் கைது செய்ய வந்தனர். அப்போது பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்த நிலையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.