லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை கைது செய்த போலிசார்!!!

லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை கைது செய்த போலிசார்!!!
Published on
Updated on
1 min read

வீட்டுவரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்டுப் பெற்ற பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மாமனாருக்குச் சொந்தமாக ராமாபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை அவரது வாரிசுதாரர்கள் விநாயகம் - அஞ்சுகம் தம்பதியருக்கு விற்பனை செய்தனர்.

ஆனால் அந்த வீட்டுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததால், அவ்வீட்டை வாங்கிய விநாயகம் - அஞ்சுகம் தம்பதியர் வளசரவாக்கம் மண்டலம், வார்டு எண் 151-ல் பில் கலெக்டராக பணியாற்றி வந்த கணேசன் என்பவரை அணுகி வீட்டு வரி மதிப்பீடு செய்தபோது, வரி தொகை 1 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து விநாயகம் - அஞ்சுகம் தம்பதியர் வீட்டை விற்பனை செய்தவர்களிடம் வீட்டு வரியை முழுவதுமாக செலுத்தித் தருமாறு தெரிவித்த நிலையில், அவர்களது உறவினரான மகேஷ் கடந்த 11 ஆம் தேதி மீண்டும் பில் கலெக்டர் கணேசனை சந்தித்து வீட்டு வரி மதிப்பீடு செய்து தரக்கோரி மனு அளித்துள்ளார்.

ஆனால் வீட்டு வரி மதிப்பீடு செய்ய கணேசன் மகேஷிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற மகேஷ் மறுநாள் மீண்டும் கணேசனிடம் சென்று கேட்டபோது ஆயிரம் ரூபாயை குறைத்து 9 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஷ் கடந்த 18 ஆம் தேதி இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வரி வசூலிப்பாளரின் பணியைச் செய்ய லஞ்சம் கேட்ட பில் கலெக்டர் கணேசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று புகார்தாரர் மகேஷ் மூலம் அரசு சாட்சி முன்னிலையில் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மகேஷிடம் இருந்து 9 ஆயிரம் லஞ்ச பணத்தை கேட்டுப் பெற்ற பில் கலெக்டர் கணேசனை கையும் களவுமாக கைது செய்து திருவள்ளூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com