"சட்டப்பேரவைக்குள் திடீரென நுழைந்த காவலர்கள்" - முதல் முறையாக சபாநாயகர் செய்த செயல்? குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுகவினர்

முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்
"சட்டப்பேரவைக்குள் திடீரென நுழைந்த காவலர்கள்" - முதல் முறையாக சபாநாயகர் செய்த செயல்? குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுகவினர்
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று காலை அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கொறடா எ.வ.வேலு, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பது மரபுக்கு எதிரானது என தெரிவித்தார். ஆதாரமில்லாமல் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

“அமலாக்கத்துறை குற்றச்சாட்டை மட்டுமே முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்; வழக்கில் தீர்ப்பு என்ன என்பது குறித்து அவர் பேசவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, அது தவறு என்றோ முதலமைச்சர் கூறவில்லை” என சபாநாயகர் விளக்கம் அளித்தார். இதனால் அவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகரின் இருக்கை முன்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் திரண்டு அமளியில் ஈடுபட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காததைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து சில திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஏற்பட்ட இந்த அமளி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com