காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்வதற்கு காரணம் இதுதான் என மதுரை செல்லூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது
மதுரை மாநகர் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்டாலின் அப்பன்ராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனது மனக் குமுறல்களை ஒரு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், "வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சொந்த அக்கா மகள் திருமண நிகழ்ச்சிக்காக செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வேதவள்ளியிடம் விடுமுறைக்காக கேட்டிருந்தேன். ஆனால் விடுமுறைக்கு காரணம் கூட கேட்காமல் விடுமுறை தர மறுத்துவிட்டார்" என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தாய் மாமனாக சொந்த அக்கா மகளின் திருமணத்திற்கு கூட செல்ல முடியவில்லை. எனது பெயர் ஸ்டாலின் என்பதால் விடுமுறை கொடுக்க மறுக்கிறாரா என்பதும் தெரியவில்லை" எனக் குழப்பத்துடன் கூறுகிறார்.
மேலும், "இரவு பகலாக காவல்துறையினர் உழைத்துக் கொண்டிருக்கிறோம். முக்கியமான நிகழ்விற்கு கூட விடுமுறை தர மறுப்பதால் தான் காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்" எனக் கூறி சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் ஸ்டாலின் அப்பன்ராஜ் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிக்க || ''அண்ணாமலை விளம்பர உளவியலுக்கு ஆளாகி உள்ளார்'' திருமாவளவன் விமர்சனம்!!