விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் உள்ள காந்தி சிலை அருகே 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் சென்று, விநாயகர் சிலையை கரைக்க உள்ள தாமரை குளம் அருகே நிறைவடைந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகர் பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதனால் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொரு விநாயகர் சிலை அருகேயும் ஒரு காவலர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலை 10 அடிகள் உயரம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்து, மூன்றாவது நாள் அன்று திருவண்ணாமலை நகரில் உள்ள காந்தி சிலையிலிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் டிராக்டர்கள் மூலம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன.