தமிழரும், திராவிடரும் இல்லாமல் அரசியல் இல்லை - முதலமைச்சர்

தமிழர், திராவிடர் என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் நடத்த முடியாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழரும், திராவிடரும் இல்லாமல் அரசியல் இல்லை - முதலமைச்சர்
Published on
Updated on
1 min read

தமிழர், திராவிடர் என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் நடத்த முடியாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற தமிழ் புலவர்கள் வரிசையில் தமிழை வளர்த்து எடுத்த அயோத்திதாச பண்டிதரின் புகழை எடுத்துரைப்பதில் பெருமையாக கருதுவதாக கூறியுள்ளார். தமிழர், திராவிடர் என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த இரண்டு வார்த்தைகளை  கொண்டு அன்றே அறிவாயுதம் ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

1891-ம் ஆண்டு திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை தோற்றுவித்து, 1907-ம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழைத் தொடங்கி, அதில் தமிழர் திராவிடர் என்ற கருத்தை ஏந்தியவர் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,திராவிடன் தமிழன் என்று அயோத்திதாச பண்டிதர் போட்டுக்கொடுத்த சாலையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சு பதிப்பாக திருக்குறளைக் கொண்டு வந்து சேர்த்த அவரது குடும்பத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமும் தடையாக உள்ளது என்றும், மனிதர்களை மனிதராக பார்ப்பவர் எவரோ? அவரே மனிதர் என்று கூறியவர் அயோத்திதாசர் என சூளுரையாற்றியுள்ளார். 1845-ம் ஆண்டு முதல் 1914-ம் ஆண்டு வரை அயோத்திதாச பண்டிதர் வாழ்ந்த நிலையில், அவரது 175-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com