நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு பேசிக்கொண்டிருந்தபோது, ராயபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, "போர் அடிக்கிறது" எனக் கமெண்ட் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் டென்ஷனான சேகர்பாபு, ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. தாமுவிடம், "நான் பேசுறது போர் அடிக்குதா? அப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க? ஜனநாயகத்தை மதித்து என்னை அழைத்தீர்கள். நான் வந்தேன். நான் அநாவசியமாகப் பேசுகிறேனா? நீங்கள் என்னைக் கூப்பிடாமலேயே இருந்திருக்கலாமே? நானும் அமைச்சராக இருந்தவன்தான். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன்" எனக் கொதித்தெழுந்தார்.
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் பாலாஜி, "நீங்கள் பேசுங்கள்..." எனக் கூறினர்.
"அவரை முதலில் அடக்குங்கள்" எனத் தாமுவை நோக்கிக் கூறியுள்ளார் சேகர்பாபு.
இந்த விவகாரம் குறித்து கூட்டத்திற்குப் பிறகு விஜய் தாமுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "ரொம்ப நேரம் பேசுறீங்க, முடியுங்கள் என்று சொன்னேன். உடனே அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, 'அப்புறம் ஏன் என்னை இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குக் கூப்பிட்டீர்கள்?' என்று கேட்டார்..." என்றார்.
"உங்கள் பேச்சு போர் அடிக்கிறது என்று நீங்கள் சேகர்பாபுவைப் பார்த்துக் கேட்டீர்களா?" என்ற கேள்விக்கு, "அதெல்லாம் ஒண்ணும் சொல்லல" எனச் சிரித்துக்கொண்டே பதிலளிக்காமல் கடந்து சென்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்