“தலித் உயிர்கள் இவ்வளவு மலிவானவையா?” - திண்டுக்கல் ராமர் கொலை வழக்கில் தொடரும் போராட்டம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்!

உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்...
velmurugan and ramar
velmurugan and ramar
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை பகுதியில் குதிரை மேய்ந்தது தொடர்பான தகராறில் தலித் இளைஞர் ராமர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆதிக்கச் சாதியினரின் நிலத்தில் குதிரை மேய்ந்ததாகக் கூறி, ராமர் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ராமர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் சாதி அடிப்படையிலான வன்முறையின் வெளிப்பாடாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தலித் உயிர்கள் இவ்வளவு மலிவானவையா? சாதி வெறியர்களைக் காப்பது யார்? இந்த ஆண்டிலேயே இது ஆறாவது ஆணவப் படுகொலை” எனக் குறிப்பிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத நிலை தொடர்வதாக விமர்சித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதை மட்டும் பிரதிநிதித்துவமாகக் கருத முடியாது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர், உரிமை மற்றும் பாதுகாப்புக்காக அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தலித் மக்களின் உயிரைப் பறிக்கும் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்தால், அது சட்ட ஒழுங்கு சீர்குலைவின் அடையாளம் மட்டுமல்ல. சமூக நீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும். தலித் உயிர்களைக் காக்கத் தவறும் அரசின் மௌனத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டிப்பதோடு, சாதி வெறியர்களுக்கு எதிராக சட்டத்தின் இரும்புக்கரம் உடனடியாகச் செயல்பட வேண்டும், வன்முறைக்கு எதிராக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கொலைக்கு நீதி கேட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தற்போது இரண்டாவதா நாளாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com