கல்குவாரி செயல்பட தடை - நீதிமன்றம் உத்தரவு - காரணம் என்ன?

கல்குவாரி செயல்பட தடை - நீதிமன்றம் உத்தரவு - காரணம் என்ன?
Published on
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வி.லெட்சுமி புறம் கல் குவாரி செயல்பட தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.சரியான அறிக்கை தாக்கல் செய்ய விட்டால்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் வி.லெட்சுமி புறம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா விராட்சிமலை பகுதியில் உள்ள வி.லெட்சுமி புறம் கிராமத்தில்கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.இந்த பகுதி சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் பழமையான புரதான சின்னங்கள் நிறைந்த சிவன் கோவில் உள்ளது அதன் அருகில் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிறிஸ்துவ ஆலயங்களும் உள்ளன.

இவ்வாறு குடியிருப்புகள் உள்ள பகுதியில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என சட்ட விதிகளும் உயர்நீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ள நிலையில் இதனை மீறி இந்த கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்குவாரி நடத்துபவர்கள் இந்த பகுதியில் செல்லக்கூடிய நீர்நிலை  வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து  லாரி செல்லும் சாலையாக மாற்றி உள்ளனர்.

இதனால் இந்த பகுதியின் விவசாயமும் பாதிக்கப்படுகிறது எனவே சட்ட விதிகளுக்கு முரணாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | கொடுக்கப்பட்டுள்ள 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்... உதயநிதி
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியரும் வட்டாட்சியரும் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் அதில் இரண்டு அறிக்கைகளிலும் வேறுபாடு இருந்தது மேலும் மாவட்ட ஆட்சியரின் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேதி குறிப்பிடாமல் இருந்ததால் கடும் கோபம் அடைந்த நீதிபதி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து வழக்கறிஞர் ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.


இதன் அடிப்படையில் நீதிமன்ற  ஆணையர் இனியன் கார்த்திக் சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.அந்த அறிக்கையில் அரசு விதிமுறைகளின் படி குவாரி செயல்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு எதிர் மாறாக குவாரியின் குறிப்பிட்ட 300 மீட்டருக்குள் குடியிருப்புகள் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்கள் கண்மாய்  இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனை படித்துப் பார்த்த நீதிபதிகள் கோபமடைந்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கும் நீதிமன்ற ஆணையரின் அறிக்கைக்கும் முற்றிலும் முரண்பாடு உள்ளது இது ஏற்கத்தக்கது அல்ல எனவே இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அதில் முரண்பாடுகள் இருந்தால் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தானாக முன்வந்து எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட கல் குவாரி செயல்பட தடைவிதித்து வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com