விஜய், உதய், ஸ்டாலின், கமல், ரஜினி... சாலமன் பாப்பையாவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

சாலமன் பாப்பையாவுக்கு எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர் மற்றும் பதிப்பாசிரியர் எனப் பல முகங்கள் உண்டு. தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தனது இலக்கியப் பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
விஜய், உதய், ஸ்டாலின், கமல், ரஜினி...  சாலமன் பாப்பையாவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
விஜய், உதய், ஸ்டாலின், கமல், ரஜினி... சாலமன் பாப்பையாவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
Published on
Updated on
3 min read

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, தனது 90வது வயதில் இன்று காலமானார். அவரது இறப்புக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் விஜய், "தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது.

அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், "சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்...

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது." எனக் கூறியிருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்." என இரங்கல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்...

தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர்.

ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர்...

அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும் - பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு." எனக் கூறியுள்ளார்.

சாலமன் சொந்த ஊரான மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன், "பல்கலைக்கழக வளாகங்களில் பேசப்பட்ட இலக்கிய நயங்களை ஊர்ப்புறமெங்கும் தனது பட்டிமன்றங்களின் வழியாக பாமரருக்கும் எடுத்துரைத்த நகைச்சுவை நாவலர், புகழ்பெற்ற பலருக்கும் தமிழ்கற்றுக் கொடுத்த ஆசான், தான் பயின்று பணியாற்றிய கல்லூரிக்கு இன்னல் வந்தபொழுது பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து சங்கம் அமைத்துப் போராடி அதனைக் காத்த களச்செயற்பட்டாளர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் புகழ்பாடும் தும்பி, ஓவியர், நடிகர், நிர்வாகி, கொடையாளர், திருக்குறளுக்கும் அகநானாறுக்கும் ஆய்வுரை கண்ட அறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று காலப்பேராற்றில் கரைந்திருக்கிறார். காலப்பேரேட்டில் நிறைந்திருக்கிறார்.

அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கியங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்நூல்களை எளிய நடையிலும், நகைச்சுவையோடும் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.

திருக்குறள்,புறநானூறு,அகநானூறு மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரைநடைகள் எழுதி உள்ளார். ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே இராமாயணம், மகாபாரதம் போன்ற தலைப்புகளில் மட்டுமே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெற்று வந்தன. அதனை உடைத்தெறிந்து ஆண் - பெண், குடும்பம், கல்வி, பொருளாதாரம் போன்ற சமூகம் சார்ந்த ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களை வழி நடத்தி வந்துள்ளார்...

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல்...

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சிதம்பரம், "தமிழறிஞர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிக வருத்தமடைந்தேன். அவர் மறைவு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் பெரும் இழப்பு. பொருள் செறிவுடன் கேட்போரை ஈர்க்கும் வகையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் அவர் பேசியதை சில முறை கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவரது இரங்கல் குறிப்பில், "பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி, "அவர் பெயர் ஒரு காரணப் பெயர் சாலமன் பாப்பையா ஐயா பட்டிமன்றத்திலும் வாழ்விலும் அவர் உண்மையில் சாலமன்தான். மதுரையின் நகரப் பகுதிகளிலும், புறநகர்களிலும், கிராமப்புறங்களிலும் சிறுவயது முதற்கொண்டு நாடிச் சென்று, முன்வரிசையில் அமர்ந்து ஐயாவின் பட்டிமன்றங்களை ரசித்தவன் நான். சிறுவயதிலேயே சிந்திக்கச் செய்தவர்; சிரிக்கச் செய்தவர். மேடைத் தர்க்க உரையாடல் வடிவத்தைப் பட்டிமன்றமாக நேர்த்தியாகவும் அறத்தோடும் தந்தவர் ஐயா சங்கப் புலவர்கள் தொடங்கி சமகாலக் கவிஞர்கள் வரை அனைவரும் அவர் சொற்பொழிவாற்றிய நள்ளிரவுகளில் சாட்சியாய் வந்து நின்றார்கள். வேற்றுக் கல்லூரி மாணவனாயினும், அமெரிக்கன் கல்லூரியில் உங்கள் வகுப்பில் அமர்ந்து நான் பாடம் கேட்டவன்; நன்றியோடு வணங்குகிறேன்." என இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், "தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர். அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்." என இரங்கல் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், "படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

விஜய், உதய், ஸ்டாலின், கமல், ரஜினி...  சாலமன் பாப்பையாவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
90 வயதில் சாலமன் பாப்பையா மரணம்... இவரது பணிகள் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com