மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பறைத் தேங்காயினை மத்திய அரசு அறிவித்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை செயல்படுத்தும் வகையில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் முடிந்தவுடன் விலை ஆதரவு திட்டத்திற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் உள்ள மூலதன நிதியில் இருந்து விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொப்பரை செய்யப்பட்ட தேங்காயினை மத்திய அல்லது மாநில நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்வதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை தமிழ்நாடு அரசிற்கு அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது.