இனி தலைவர்களின் சிலைகளில் QR கோடு...வாழ்கை வரலாற்றை இப்படியும் அறியலாம் - அமைச்சர் பதில்!

இனி தலைவர்களின் சிலைகளில் QR கோடு...வாழ்கை வரலாற்றை இப்படியும் அறியலாம் - அமைச்சர் பதில்!
Published on
Updated on
1 min read

தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள் கிடைக்க அரும்பாடு பட்ட தமிழ்தாத்தா உ.வே.சாவுக்கு தமிழகம் முழுவதும் திரு உருவச்சிலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள், அண்ணா நூலகம், மதுரை நூலகங்களில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் எனவும் கே பி முனுசாமி கேட்டுக்கொண்டார். 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்தாத்தாவுக்கு சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியவர், உறுப்பினரின் கோரிக்கை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் என பேசினார். 

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கே பி முனுசாமி, தமிழ்த்தாத்த சிலை அமைக்கும் இடத்தில் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டினை வருங்காலத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் பதிக்க வேண்டும் எனவும், அவருடைய புத்தகங்களை நூலாக தொடுத்து அனைத்து நூலகங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளிலும், நினைவில்லங்களிலும் QR கோடு பொருத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் QR கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com