அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், பழைய மாணவர்கள் குறித்து பேசியது அரங்கில் உள்ள அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
புதிய மாணவர்களைக் கூட சமாளிக்கலாம், ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கடினம் என கூறியவர், உதாரணத்திற்கு துரைமுருகனை கூறலாம் என நகைச்சுவையாக பேசியிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய துரைமுருகனை, மு.க.ஸ்டாலின் எப்படிதான் சமாளிக்கிறாரோ? என கூறியவர் முதலமைச்சரை பார்த்து ஹேட்ஸ்ஆப் என்றார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கடுமையான பதிலடி கொடுத்திருந்தார். தன்னை பழைய மாணவர் என கூறியதால் ஆவேசமடைந்த துரைமுருகன் சாகும் நிலையில் இருக்கும் பல்லு போன நடிகர்களால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை என அதிரடி கிளப்பினார்.
இந்த இரு வீடியோக்களும் இணையத்தில் படு வைரலானதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ரஜினியின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக பேசினார். வயது மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு வழிநடத்த வேண்டும் என கூறியது அனைவரது கவனத்தையும் பெற்றது.
பழைய மாணவர்கள் - பல்லு போன நடிகர்கள் புதிய சர்ச்சைகளை கிளம்பிய நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதியன்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், துரைமுருகன் தனது நீண்ட நாள் நண்பர், அவர் என்ன கூறினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவவதில்லை என கூறினார்.
சமாதானம் செய்யும் விதமாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். நகைச்சுவையை பகைச்வையாக்க வேண்டாம் என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.