

தமிழக அரசியல் களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள். மலேசியாவில் நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அளித்த பிரத்யேகப் பேட்டியில், விஜய்யின் இந்த மலேசியா பயணம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகளை விளக்கியுள்ளார்.
மலேசியாவில் கூடிய பிரம்மாண்டமான கூட்டம் என்பது விஜய்யின் செல்வாக்கை மட்டும் காட்டவில்லை, மாறாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே, குறிப்பாகத் தமிழர்களிடையே நிலவும் ஒரு விதமான அரசியல் ஏமாற்றத்தின் வெளிப்பாடு இது என்கிறார் பாண்டே. வெளிநாட்டில் இருக்கும்போது தாய்நாட்டின் மீதான பற்று அதிகமாகும் என்பதால், அங்கிருப்பவர்கள் ஒரு மாற்று சக்தியை எப்போதும் எதிர்பார்ப்பார்கள். ரஜினி, விஜயகாந்த், சீமான் வரிசையில் இப்போது விஜய்க்கும் அந்த ஆதரவு கிடைக்கிறது. ஆனால், அங்கு திரளும் 75,000 பேரில் ஒரு 1000 பேர் கூட இங்கு வந்து ஓட்டுப் போடப் போவதில்லை என்பதையும் என்றார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளை 'ஸ்டெப் பை ஸ்டெப்' நகர்வுகள் என்று கூறிய பாண்டே, அவர் எதையும் அவசரத்தில் செய்யவில்லை. விக்ரவாண்டி மாநாடு தொடங்கி மலேசியா விழா வரை, அவர் தனது கூட்டணிக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதை மிக நுட்பமாகத் தெரிவிக்கிறார். "நான் தனியா வரல, அணியா வந்திருக்கேன்" என்று விஜய் சொல்வது, ஒரு விதமான அழைப்புதான். விஜயகாந்த் தனது ஆரம்பக் காலத்தில் எந்தப் பாணியைக் கடைப்பிடித்தாரோ, அதே பாணியை விஜய் தற்போது கையில் எடுத்துள்ளார் என்றார்.
விஜய்யின் கொள்கைகள் குறித்துப் பேசுகையில், அது ஒரு "கிரைண்டர் கொள்கை" என்று விமர்சித்த பாண்டே, அதாவது எம்.ஜி.ஆர், அண்ணா, விஜயகாந்த் எனப் பலரது பேச்சுகளையும் கொள்கைகளையும் எடுத்து ஒன்றாக அரைத்து ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்க விஜய் முயல்கிறார். திமுக மற்றும் அதிமுகவிற்கும் கொள்கை அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், தவெக-வும் அதே திராவிடக் கோட்பாடுகளைத் தான் முன்னிறுத்துகிறது. இதனால் கொள்கை ரீதியாக ஒரு மாற்றத்தை விஜய் கொண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை என்பது அவரது வாதம்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், வளர்வதற்காகப் பிரதமர் மோடியை ஸ்டாலின் எதிர்க்கிறார், அதேபோல் வளர்வதற்காக ஸ்டாலினை விஜய் எதிர்க்கிறார். இது ஒரு வகையான 'டாப்-டவுன்' அரசியல் உத்தி. திமுகவின் வாக்கு வங்கியை விஜய் அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்றாலும், விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே ஒருவிதமான பதற்றத்தை \உருவாக்கியுள்ளது என்பது உண்மைதான். இதனால்தான் திமுகவும் மற்ற கட்சிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கூட்டங்களைக் கூட்ட முயற்சிப்பதாக கூறினார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் ஒரு முழுநீள அரசியல் படமாக இருக்காது என்றாலும், அதில் சில சமூகக் கருத்துக்கள் இருக்கும், அவை தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கக்கூடும். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் வெளியாகும் படத்தில் வரும் ஒரு வசனம் அல்லது காட்சி கூட மக்களின் மனநிலையை மாற்ற வாய்ப்புள்ளது. ரஜினி நடித்த 'முத்து' படத்தில் வந்த ஒரு சில காட்சிகள் எப்படிப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல ஜனநாயகன் படமும் அமையலாம் என்றார்.
இந்த மலேசியா விழா விஜய்க்கு ஒரு பெரிய 'பெஞ்ச்மார்க்' (Benchmark) ஆக அமைந்துள்ளது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் நிதானமாக இருப்பதால், வரும் மே மாதம் மேடை ஏறும்போது அதன் பலன் என்னவென்று தெரியும் என்று கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.