வீடுகள் அகற்றம்: ஆரம்பத்திலேயே தடுக்காமல் இருந்தது யார் தவறு? - சீமான் கேள்வி

Published on

அடையாறு ஆற்றின் கரையோரம் வீடுகளை அகற்றி விட்டு அந்த இடத்தை யாரிடம் தரப்போகிறீர்கள் என சீமான் ஆவேசமாக கேள்வியெழுப்பினார். 

அனகாபுத்தூர் பகுதி அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், ஜவஹர்லால் நேரு தெரு, டோபிகானா தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700 வீடுகள் உள்ளன. அவற்றில் ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சென்னை அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்குவது மிகப்பெரிய கொடுஞ்செயல் என கூறினார்.

பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற குற்றச்சாட்டை வைத்து வீடுகளை இடித்து, மக்களை வெளியேற்றி, செம்மஞ்சேரி போன்று வெளிப் பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களைத் தலைநகரில் இருக்க விடக் கூடாது என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது என ஆவேசப்பட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே தடுக்காமல் இத்தனை வருடமாக மின் இணைப்பு, வாக்காளர் உரிமை, எரிவாயு இணைப்பு வழங்கிவிட்டு, வீட்டு வரியும் பெற்றுக்கொண்டு தற்போது ஆக்கிரமிப்பு என்றால் யாருடைய தவறு என காட்டமாக கேள்வியெழுப்பினார். 

முன்னதாக சென்னை நந்தனத்தில் உள்ள இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு-வை நேரில் சென்று நலம் விசாரித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com