சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் சென்னை மாநராட்சி அலுவலகத்தில் மழை பாதிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் எந்த பகுதியில் இருந்து, அழைப்பு வந்தாலும், 15 நிமிடங்களில் அந்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களின் தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய முதலமைச்சர் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் மழை நீர் தேக்கத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகொடுத்துள்ளதாகவும், அடையாற்றின் கரையை அகலப்படுத்தியதால், 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையிலும் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.