கழிவறை வசதியுடன் ஓய்வறை ,தங்கும் விடுதிகள் , பணி விருது மகளிர் காவலர்களுக்கு 9 சிறப்பான அறிவிப்பு - முதல்வர்

கழிவறை வசதியுடன் ஓய்வறை ,தங்கும் விடுதிகள் , பணி விருது மகளிர் காவலர்களுக்கு 9 சிறப்பான அறிவிப்பு  - முதல்வர்
Published on
Updated on
3 min read

தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு

தமிழக காவல் துறையில் 1973ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று  நடைபெற்ற, தமிழக காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, புதிதாக 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பெண் காவலர்கள் வீரசாகசம் செய்தனர். அப்போது அரங்கில் இருந்த மற்ற பெண்கள் காவலர்கள் அனைவரும் கரஒலியை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும்

பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா. பெண்கள் உயர் கல்வி பெற்று உயரிய பதவியை வகிக்க வேண்டுமென கூறியவர் கலைஞர்

பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. தமிழ்நாட்டில் 35000 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர்.

படிக்க மட்டுமல்ல அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என்றவர் பெரியார். பெண்கள் காக்கிச் சீருடையில் துப்பாக்கியை ஏந்த வைத்தவர் கலைஞர். 50ம் ஆண்டு பொன்விழாவில் தமிழ்நாட்டின் பெண் காவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பொன்விழா கொண்டாடும் இந்த நாளில் நவரத்தினம் போல மகளிர் காவலர்களுக்கு 9 சிறப்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன.

1. பெண் காவலர்கள் குடும்பத்தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியும் செய்து வருவதால் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரோல் கால் எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு
காலை 7 மணிக்கு பதிலாக இனி காலை 8 மணிக்கு தொடங்கும்.

2. சென்னை, மதுரை பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

3. அனைத்து காவல்நிலையங்களிலும் மகளிர் காவலர்களுக்காக கழிவறை வசதியுடன் ஓய்வறை வசதி கட்டித்தரப்படும்.

4. பெண் காவலர்கள் காவல் நிலையங்களில் பணிக்கு வரும் போது, தங்களுடைய குழந்தைகளை விட்டு விட்டு வருவதை கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் "காவல் குழந்தைகள் காப்பகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதை முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்தும் விதமாக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.

5. பெண் காவலர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, அவரது பெயரில் கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள் குடும்பத்தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் அளிக்க உத்தரவிடப்படும்.

7.பெண் காவலர்களுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கிச்சுடும் போட்டி நடத்தப்பட்டு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

8. பெண் காவலர்களின் பிரச்சினைகள், தேவைகளை கலந்து ஆலோசனை செய்யும் விதமாக காவல்துறையில் பெண்கள் எனும் தேசிய மாநாடு ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

9. பெண் காவலர்கள் தங்கள் பணியை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாக குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்படும்.


இந்த அறிவிப்புகள் உங்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தலைமை காவலர்கள் இந்த அறிவிப்பு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் இது போன்ற அறிவிப்புகள் பெண்களுக்கு உற்சாக ஊக்கமும் அளிப்பதாகவும் தெரிவித்தனர் குறிப்பாக பெண்களுக்கு கூடுதலான கழிவறைகள், நேர மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகள் மிகவும் சந்தோஷம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com