

பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 40 சென்ட் தர்ம சாசன நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி (CB-CID) போலீசார் முழுமையாகக் கையில் எடுத்துள்ள நிலையில், இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான இந்த நிலம், பழனி நகரம் வார்டு எண்.3, பிளாக் எண்.25, நகரப்புல எண்.998 மற்றும் 999-ல் (நகர நில அளவை எண்.2) அமைந்துள்ளது. மொத்தம் 1 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த நிலம், கடந்த 1888-ஆம் ஆண்டு பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவரால், மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை விற்பனை செய்யவோ, வேறு யாருக்கும் மாற்றிக் கொடுக்கவோ எந்த உரிமையும் இல்லை. இது முழுமையாகப் பொதுஅறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்தாகும். மேலும், இந்த நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், பழனி முதன்மைச் சார்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை, இந்த நிலத்தின் நிர்வாக உரிமை பழனி கோயில் இணை ஆணையரிடமே இருக்கும் என்றும், தனிநபர்கள் இதனை பாராதீனம் செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தன.
இதையடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பழனி கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தி, பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 6, 2026 அன்று, நீதிமன்ற உத்தரவுகளையும், கோயில் நிர்வாகம் அளித்திருந்த எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளையும் மீறி, இந்த நிலம் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோரின் பெயரில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு கணக்கு கிரயம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பதிவு நடைபெற்றபோது, நிரந்தர இணை சார்பதிவாளர் பணிமாறுதலில் இருந்ததால், கூடுதல் பொறுப்பில் இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஆவணங்களை முறையாகச் சரிபார்க்காமல் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பதிவை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சார்பதிவாளர், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 4 பேர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், சிபிசிஐடி அதிகாரிகள் பழனி தேவஸ்தான தலைமை அலுவலகம், மோசடி நடந்ததாகக் கூறப்படும் நிலப்பகுதி மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனைகள் நடத்தி புதிய எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இன்று இரண்டாவது நாள் விசாரணையின் ஒரு பகுதியாக, பழனி கோயில் அதிகாரிகள் மற்றும் முக்கிய அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பல மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், 5 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படை, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனித்தனியாக விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதில், இரண்டு அதிகாரிகள் மோசடி பதிவுடன் தொடர்புடைய முக்கிய அசல் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மீதமுள்ள அதிகாரிகள் அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த ஜூலை 6-ஆம் தேதி சட்டவிரோத பதிவு நடைபெற்றபோது அலுவலகத்திற்கு வந்தவர்கள் யார், பதிவுக்கு துணைநின்ற ஊழியர்கள் யார், ஆவணங்கள் எவ்வாறு பரிமாறப்பட்டன என்பது குறித்து அறிய சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மோசடியில் மேலும் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.