சனாதன விவகாரம் "உச்சநீதிமன்ற வழக்கை எதிர்கொள்வோம்" அமைச்சர் சேகர்பாபு!

Published on

சனாதன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி, கோவிலில் வைணவ திருக்கோயில் ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து சமய அறநிலைதுறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 6 திருக்கோவில்களுக்கு காலை சென்று மாலை வரை சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், ஆடி மாதமும் இதேப்போன்று ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்ததாகவும் அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டார்.

மகா சிவராத்திரி கொண்டாட்டமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் 9 அம்மன்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய அவர், பக்தர்கள் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது என்றும், இன்று தொடங்கிய ஆன்மீக சுற்றுலாவில் 62 பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேபோல், சனாதன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் அமைச்சர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com