

மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நெஞ்சை உலுக்கும் விதமாக தினம் தினம் அரங்கேறி வருகின்றன. அதுவும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் அறியாமை, இயலாமை, பயம் ஆகியவற்றை பயன்படுத்தி அவர்கள் மீது, மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.
எல்லாவிதத்திலும் நாம் வளர்ச்சி அடைந்துவிட்டோம், ஆனால் காதல், பிரிவு, நட்பு போன்ற உளவியல் முரண்களை கையாளுவதில் நாம் இன்னமும் பக்குவப்படவில்லை. இன்னமும் ஒரு பெண் காதலை ஏற்க மறுத்தால், “எனக்கு கிடைக்காத நீ வாழவே கூடாது” என்ற மோசமான மனநிலையோடுதான் பல ஆண்கள் இங்கே உள்ளனர். அதிலும் இந்த கால இளைஞர்கள் மிகவும் ‘impulsive’ ஆன முடிவுகளை எடுத்து அடுத்தவர் வாழ்க்கையோடு சேர்த்து, தங்களின் வாழ்க்கையையும் வீணாக்கிக்கொள்கின்றனர். அப்படி மோசமான சம்பவம்தான் இன்று காலை நடந்துள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை அருகே காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது கத்தியுடன் கொலையாளியை கைது செய்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் அடுத்த சேரான் கோட்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் ஷாலினி அங்குள்ள ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை முனியராஜ் (21) என்ற காதலின் பெயரில் கடந்த 10 நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாலினி வழக்கம் போல இன்று காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த
முனிய ராஜ் காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அவர் காதலை மறுத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ் தான் மறைத்துவந்திருந்த கத்தியால் ஷாலினியை கழுத்தில் குத்தி கொன்றுள்ளார்.
உடனடியாக மாணவியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரியான முனியராஜை போலீசார் உடனடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர், மேலும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் காவல் நிலையம் முன்பு திரண்டு முனியராஜை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி தர்ணா போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.