பள்ளி நிர்வாகம் மீதுள்ள தைரியத்தில் தான் அனைத்தையும் செய்தேன்,..ஆசிரியர் ராஜகோபால் பரபரப்பு வாக்குமூலம்.! 

பள்ளி நிர்வாகம் மீதுள்ள தைரியத்தில் தான் அனைத்தையும் செய்தேன்,..ஆசிரியர் ராஜகோபால் பரபரப்பு வாக்குமூலம்.! 
Published on
Updated on
1 min read

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், இவர் சென்னையில் புகழ்பெற்ற பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  இணைய வழி வகுப்பின் போது இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றியதாகவும், அவர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டம் பிரிவு 12 இன் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரத் தொடங்கியது. இதன்படி இவரது லாப்டாப்பில் பல மாணவிகளின் அந்தரங்க புகைப்படம் இருந்ததும். அதை அந்த பள்ளியில் பணிபுரியும் மேலும் மூன்று ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர் பள்ளியில் சேர்ந்த புதிதிலேயே பாலியல் புகாருக்கு உள்ளாகி இருப்பதும், பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் இது குறித்து அந்த ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் அவர்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதன் பின் பள்ளி தலைமைக்கும், அறங்காவலர் குழுவிற்கும் நெருக்கம் ஆகியுள்ள ராஜகோபாலனுக்கு பள்ளி நிர்வாகம் பல பொறுப்புகளை கொடுத்துள்ளது. அதன் காரணமாக ஆசிரியைகளும், மாணவிகளும் ராஜகோபாலனை கண்டு அஞ்சியுள்ளனர். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜகோபாலன் தனது பாலியல் சீண்டல்களை தொடர்ந்துள்ளார். வகுப்பறையிலும், சில மாணவிகளை சிறப்பு வகுப்பு என்று அழைத்தும் பாலியல் சீண்டல்கள் கொடுத்துள்ளார். 

தான் என்ன செய்தாலும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாது, நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையிலேயே இது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார் ராஜகோபாலன். 

இந்த வாக்குமூலத்தின் மூலம்  இவரது  செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த கட்டமாக பள்ளி நிர்வாகம் மேல் காவல்துறையின் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com