சவுக்கு பக்கம் நிற்கும் சீமான்;எதிராக தி.மு.க

சவுக்கு பக்கம் நிற்கும் சீமான்;எதிராக  தி.மு.க
Published on
Updated on
2 min read

சவுக்கு பக்கம் நிற்கும் சீமான்;எதிராக  தி.மு.க 

சவுக்கு சங்கர் மீதான திமுக அரசின் தொடர் பழிவாங்கும் போக்கு அதிகார அடக்குமுறையின் உச்சம் என 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

சீமான் கண்டனம் :

தம்பி சவுக்கு சங்கர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றமே நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை எக்காரணம் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கக்கூடாது என்று அவசர அவசரமாக மேலும் நான்கு வழக்குகளைப் பதித்து , தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையாக  கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக படுகொலை :

கொடுங்குற்றம் இழைத்த சிறைவாசிகளுக்குகூட வழங்கப்படுகின்ற ஜனநாயக உரிமையான பார்வையாளர் சந்திப்புக்குக்கூட தடை விதித்து,சவுக்கு சங்கர் மீது அதிகார அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட திமுக அரசு, தற்போது அவரைச் சிறையிலிருந்து வெளியே விடவே கூடாது என்று அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து வழக்குக்களைத் தொடுப்பதென்பது திமுக அரசின் கொடூர முகத்தையே வெளிக்காட்டுகிறது. கருத்துச்சுதந்திரம், தனிமனித உரிமை, ஜனநாயக மாண்பு என மேடைக்கு மேடை பேசி, சமூகநீதியின் காவலர்களாகத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக ஆட்சியாளர்கள், தங்களது ஆட்சியை விமர்சித்த காரணத்திற்காகவே சவுக்கு சங்கரை அதிமுக அரசு போட்ட வழக்குகளில் சிறைப்படுத்திக் கொடுமைப்படுத்துவதென்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என்று விமர்சித்துள்ளார்.


சீமான் கொந்தளிப்பு

திமுக அரசின் இத்தகைய அதிகார அடக்குமுறைகளைக் கண்டு ஜனநாயக பற்றாளர்களும், மனித உரிமை அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், ஊடகவியலாளர்களும் ஒரு சிறு எதிர்ப்பும் தெரிவிக்க முன்வராமல் வாய் மூடி அமைதிகாப்பது ஏன்? செய்வது திமுக அரசு என்பதற்காகவே, அதன் அத்தனை அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும் பொறுத்துப்போக வேண்டும் என்பது அறம் சார்ந்த அரசியல் நெறிதானா? இன்றைக்கு தம்பி சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்படும் அதிகார அடக்குமுறையானது, நாளை உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழாது என்று உறுதியாக கூற முடியுமா?  திமுக அரசின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சவுக்கு விடுதலை;சீமான் வேண்டுகோள் :

 திமுக அரசு தனது பழிவாங்கும் போக்கினை கைவிட்டு, இனியும் கால தாமதம் செய்யாமல் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற்று ,உச்சநீதிமன்ற உத்தரவினை ஏற்று அவரை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி  நாம் தமிழர் கட்சி சீமான்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com